Friday, February 10, 2023

உலகமயமாக்கல் - ஆசிரியர் : எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.

உலகமயமாக்கல் குறிப்புக்கள் : 1. முன்னுரை 2. உலகமயமாக்கல் என்றால் என்ன? 3. உலகமயமாக்கலும் நவீன தொழினுட்பமும் 4. உலகமயமாக்கலை ஊக்குவிக்கும் சக்திகள் 5. உலகமயமாக்கலால் ஏற்படும் விளைவுகள் 6. முடிவுரை. உலகமயமாக்கல் என்பது உலக நாடுகளையும் அவற்றில் வாழும் மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு செயன்முறையாகும். அது பொருளாதார, தொழில்நுட்ப, கலாசார மற்றும் அரசியல் பிணைப்புக்களுக்கூடாக உலக மக்களை மிக அருகில் எடுத்து வருவதுடன், அவர்கள் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது. மிக முக்கியமானதாக இருந்து வரும் பொருளாதார கண்ணோட்டத்தில் நோக்கும் பொழுது, உலகமயமாக்கல் என்பது அனைத்து நாடுகளினதும் வளர்ந்து வரும் பொருளாதார ஒருங்கிணைப் பாகவும், தேசிய சந்தைகள் ஓர் உலகளாவிய சந்தையில் ஒருங்கிணையும் ஒரு செயன்முறையாகவும் உள்ளது. தேசிய சந்தைகள், பொருட்கள் மற்றும் சேவைகள் என்பவற்றிலான அதிகரித்த அளவிலான எல்லை தாண்டிய வர்த்தகத்திலும் சர்வதேச மூலதனம் மற்றும் பணம் என்பவற்றின் அசைவுகளுக்கூடாகவும் தொழில்நுட்ப பரிமாற்றத்துக் கூடாகவும் இது இடம் பெற்று வருகின்றது. புதிய சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், செலவு அனுகூலம் மற்றும் உயர் இலாபம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு பொருளாதார நடவடிக்கைகள் தேசிய எல்லைகளைத் தாண்டி வியாபித்துச் செல்லும் பொழுது பண்ட உற்பத்தி வர்த்தகம் மற்றும் முதலீடு என்பன சர்வதேசமயமாக்கப்படுகின்றன. அரசியல் அடிப்படையில் நோக்கும் பொழுது உலகமயமாக்கல் என்பது ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள், பால் சமத்துவம், ஒளிவு மறைவற்ற ஆட்சி மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் என்பவற்றின் பெருக்கம் என்ற வகையிலேயே கருதப்பட்டு வருகின்றது. இது தவிர உலகமயமாக்கல் செயன்முறை ஒரு சமூகவியல் ரீதியான பரிமாணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதாவது, உலக மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வதும் பொப் இசை, ஹொலிவூட் படங்கள், நீலநிறக் காற்சட்டைகள், திடீர் உணவகங்கள் மற்றும் நவீன வாழ்க்கை மோஸ்தர்கள் என்பவற்றின் பரவலாகவும் அது நோக்கப்படுகிறது. பொதுவாகக் கூறுவதானால் உலகமயமாக்கல் சக்திகள் கைத்தொழில் நாடுகளிலிருந்தே தோன்றி வருகின்றன. வளர்முக நாடுகளை தம்மால் வடிவமைக்கப்படும் உலகளாவிய அமைப்புக்குள் உள்வாங்கிக் கொள்வதே இச்சக்திகளின் நோக்கமாகும். இது அநேகமாக மேலைய நாடுகளின் மூலதனம், தொழில்நுட்பம், கலாசாரம், எண்ணப் போக்குகள் மற்றும் வாழ்க்கைப் பாணிகள் என்பவற்றை வளர்முக நாடுகளுக்குள் ஊடுருவச் செய்கின்றன. இந்த வகையில் இது உலக நாடுகளின் பொருளாதார, கலாசார, அரசியல் மற்றும் சித்தாந்த கொள்கைகளை ஒரு முகப்படுத்தும் (அல்லது மேலைத் தேசமயமாக்கும்) ஒரு செயன் முறையாகவே தென்படுகிறது.நவீன தொழில்நுட்பம் மறுபுறத்தில், உலகமயமாக்கல் என்பது தொழில்நுட்பத்திற்கு ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் காரணமாக காலம், இடம் மற்றும் தேசிய எல்லைகள் என்பவற்றைச் சுருக்கியும் இல்லாமல் செய்தும் வருகின்றது. இணையம். இடம்பெயர் தொலைபேசி, தொலைநகல் பொறி முதலிய புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் மலிவானவையாகவும் உயர் வேகத்திறன் கொண்டவையாகவும் பரந்த ஆட்புலத்தை உள்ளடக்கக் கூடியவையாகவும் உருவாகி வருகின்றன. அவை நிதிச்சந்தைகளின் ஒருங்கிணைப்பினையும் பல தேசிய நிறுவனங்களின் பரவலையும் மக்களிடையே தகவல் மற்றும் கருத்துக்கள் என்பவற்றின் பரிமாற்றத்தினையும் வியப்பூட்டும் அளவுக்கு துரிதப்படுத்தியுள்ளன. நாங்கள் இன்று வாழ்ந்துவரும் உலகம் பயங்கரமான போர்கள், வன்செயல்கள் மற்றும் குற்றச்செயல்கள் என்பவற்றினாலும் பெருகிவரும் அரசியல் கொந்தளிப்புக்களினாலும் சிதைந்து சின்னாபின்னமாக்கப்பட்டுக் கட்டுரை மலர் 13 த-துரைசிங்கம் பரவலாக வியாபித்துச் செல்லல், இந்தச் சூழ்நிலையில் பேரளவிலான அரசியல் மற்றும் பொருளாதார சக்தியை தம்வசம் கொண்டிருக்கும் (ஐரோப்பா, ஜப்பான், சீனா, ருஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய) வல்லரசுகள் உருவாகியுள்ளன. 1990 களின் போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட (தொழில் நுட்ப மாற்றங்கள். தகவல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியை அடுத்து சர்வதேச ரீதியில் அரசியல் சூழலில் ஏற்பட்ட திருப்பங்கள் போன்ற) பெருமாற்றங்கள் உலகப் பொருளாதாரம் படிப்படியாக ஒருங்கிணைவுதற்கான ஒரு சூழ்நிலையைத் தோற்றுவித்தன. 1990 களின் நடுப்பகுதியின் போது வளர்முக நாடுகள் அனைத்துமே உலக வர்த்தக நிறுவனத்தில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டதுடன், வர்த்தக தாராளமயமாக்கலுக்கான கடப்பாடுகளை ஏற்றுக் கொண்டன. எவ்வாறிருப்பினும், உலகமயமாக்கலின் அனுகூலங்கள் நாடுகளுக்கு இடையில் சமமான முறையில் பகிரப்பட்டிருக்கவில்லை என்பதனை ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் மானிட அபிவிருத்தி அறிக்கை போன்ற பல ஆவணங்கள் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன. உலகமய மாக்கலின் விரிவாக்கத்துடன் இணைந்த விதத்தில் சமூக, அரசியல் கொந்தளிப்புக்கள் தோன்ற முடியும் என்பதனை அண்மையில் சீட்டில் நகரத்திலும் பல மூன்றாவது உலக நாடுகளிலும் இடம் பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன. உலகவங்கி / சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வர்த்தக நிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புக்கள் உலகமயமாக்கலை ஆதரித்து பேசிவந்த போதிலும், வறிய உலகம் எதிர்கொண்டிருக்கும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், போஷாக்கின்மை மற்றும் தொழில்நுட்ப பின்னடைவு போன்ற முக்கியமான பல பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருந்து வருகின்றது. கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, பயிற்சி, நிதி, வங்கித் தொழில், காப்புறுதி மற்றும் போக்குவரத்து போன்ற வளங்கள் அனைத்தும் வளர்ச்சியடைந்துள்ள கைத்தொழில் நாடுகளிலேயே ஒன்று திரண்டுள்ளன. இந்த நிலையில் வளர்முக உலகம் எதிர்காலத்தில் மாற்றம் மற்றும் செல்வச் செழிப்பு என்பனவற்றைச் சாதித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் அரிதாகவே தென்படுகின்றன. உலகமயமாக்கலை முனைப்புடன் ஆதரித்துப் பேசி வருபவர்கள், வறிய நாடுகள் தொடர்பாக அவர்கள் முன்வைத்து வரும் அபிலாஷையுடன் கூடிய இலக்குகள் சாதித்துக் கொள்ளப்படுவதனை உறுதி செய்தாலே ஒழிய இன்றைய இருண்ட யதார்த்த நிலைமைகள் இன்னும் பல வருடங்களுக்கு அவ்வாறே தொடர்ந்து நீடித்து வரக்கூடும். நன்றி - 'பொருளியல் நோக்கு" - ஆசிரியர் : எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.

No comments:

Post a Comment