Friday, February 10, 2023

விஞ்ஞானமும் சமூகமும் - ஆசிரியர் : எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.

விஞ்ஞானமும் சமூகமும் குறிப்புக்கள் : 1.முன்னுரை 2. சமூக அமைப்பு 3. விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் 4. அவற்றின் விளைவுகள் 5. விஞ்ஞானத்தின் மூலம் சமூகம் பெறும் பயன்கள் 6.பாதிப்புக்கள் 7. முடிவுரை இன்றைய யுகம் விஞ்ஞான யுகம் எனப்படுகிறது. மனிதவாழ்க்கையோடு விஞ்ஞானம் பிரிக்க முடியாத வகையில் தொடர்பு கொண்டுள்ளது. சமூக முன்னேற்றத்திற்கே விஞ்ஞானம் இன்று அடித்தளமாக அமைந்துள்ளது. எனவே விஞ்ஞானத்திற்கும் சமூகத்திற்குமிடையேயுள்ள தொடர்பினை ஆராய்தல் பயனுடையதாகும். சமூகம் என்பது பல்வேறு சேர்க்கைகளின் பிரதிபலிப்பாகும். பெரும் பாலான சமூக அமைப்புக்கள் இன, மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டே காணப்படுகின்றன. இத்தகைய கூட்டத்தினர் ஓர் இடத்தில் கூடி வாழும் போது அவர்களை ஒரு சமூகத்தினர் என்றழைப்பர். இத்தகைய சமூகம் இன்று முன்னேற்றப் பாதையில் விரைந்து செல்வதற்கு விஞ்ஞானம் துணை செய்கிறது. விஞ்ஞானம் இன்று மனித வாழ்க்கையுடன் பிரிக்கமுடியாத வகையில் தொடர்பு கொண்டுள்ளது. நாளுக்கு நாள் இத்தொடர்பு வலுப்பெற்று வருகிறது. ஆரம்ப காலத்தில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனிதர்கள் நாகரிகமுற்று நல்ல பண்பாடுகளைக் கற்றுக் கொள்வதற்கு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களே அவர்களுக்குத் துணை செய்தன எனலாம். நோய்களால் பாதிப்புற்றோர்க்கும் வாழ்க்கை வசதிகளின்றித் தவித்தோருக்கும் விஞ்ஞானம் வழிகாட்டியாக அமைந்தது. ஜென்னர் என்பவர் கண்டுபிடித்த அம்மைப்பால் ஏற்றும் பணியானது மனித குலத்தைக் கொடிய அம்மை நோயினின்றும் காப்பாற்ற உதவியது. தோமஸ்ஆல்வா எடிசன் கண்டறிந்த மின்சாரக்குமிழ் மக்கள் சமூகத்தை இருளிலிருந்து ஒளிமயமான உலகுக்குள் இட்டுச் சென்றது. லூயி பாஸ்டருடைய நுண்கிருமி தொடர்பான ஆய்வு, மேரி கியூரி அம்மையாரின் நேடியம் தொடர்பான ஆய்வு எல்லாம் மக்கள் சமூகத்திற்குக் கிடைத்த அரிய பயன் தரும் விடயங்களாகும். மருத்துவத்துறையை மட்டும் எடுத்துக் கொண்டால் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களால் தொற்றுநோய்கள் பல தடுக்கப்படுகின்றன. குழந்தைகட்கு முக்கூட்டு மருந்தேற்றுதல், போலியோ நோய்த்தடுப்பு சொட்டு மருந்தளித்தல் என்பனவற்றை இதற்கு எடுத்துக்காட்டுக்களாகக் கூறலாம். விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களில் ஒன்றான மின்சாரம் இன்று சகல தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுத்தப்படுகிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் ஏற்பட்ட தொழில் நுட்பம் இன்று சமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுகிறது. தொடர்பாடல் துறையிலும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் மக்களுக்கு இன்று பெரிதும் பயன்படுகின்றன. தொடர்புச் சாதனங்களின் அதிகரிப்பும் விஞ்ஞானத்தின் விளைவே எனலாம். தொலைபேசி, திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, கணனி, இணையம், தொலைநகல், வீடியோ சாதனங்கள் முதலியன கல்வி வளர்ச்சிக்கும் சமூகப் பயன்பாட்டிற்கும் உதவுகின்றன. போக்குவரத்துத் துறையை எடுத்துக் கொண்டால் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களின் உச்சக்கட்ட பயன்பாட்டை இன்று மக்கள் சமூகம் பயன்படுத்தி வருவதைக் காணலாம். நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதன் பேறாக நீராவிக்கப்பல், நீராவிப்புகையிரதம் என்பவற்றின்மூலம் பயணம் செய்த மக்கள் இன்று அதன் துரித வளர்ச்சியினால் அதிவேகமாகச் செல்லும் 'சுப்பர்சொனிக்', 'ஜெட்" விமானங்களில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. இவை எல்லாம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களின் பயனேயாகும். மருத்துவத்துறையில் இன்று மகத்தான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. என்றால் அதற்கும் விஞ்ஞான வளர்ச்சியே மூலகாரணம் எனலாம். இருதயமாற்றுச் சிகிச்சை, இரவல் சிறுநீர்ப்பை பொருத்துதல், ஸ்கேனர் மூலம் நோய்களைக் கண்டறிதல், பரிசோதனைக் குழாய் மூலம் கருவை உண்டாக்குதல் போன்ற அதிநவீன முறைகளுக்கெல்லாம் விஞ்ஞானமே வித்திட்டுள்ளது. சமூகத்திற்குப் பயன் தரும் பல்வேறு மருத்துவப்பணிகளுக்கு விஞ்ஞானம் மூலகாரணமாக விளங்கி வருகிறது. இவை மட்டுமன்றிப் புதியதோர் உலகினைக் காணவும், விண்வெளியில் உலா வரவும் விஞ்ஞானம் இன்று வழி கோலியுள்ளது. சந்திரமண்டலத் தியல்பு கண்டறியவும் செயற்கைக் கோள்களை விண்ணில் பவனி வரச் செய்யவும் விஞ்ஞானம் இன்று வழி காட்டுகிறது. விண்வெளி ஆய்வுகள் நாளுக்குநாள் பெருகி வருகின்றன. விண்வெளிக்கு மனிதன் சென்றுவரவும், வேறு கோள்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் விஞ்ஞானம் உதவுகின்றது. சமூகத்தின் பயன்பாட்டுக்கு விஞ்ஞானம் இன்று பெரிதும் உதவுகின்றது. இணையம் மூலம் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது. முன்பின் தெரியாதவர்களோடு கூட இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்பு விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் இன்று மக்கள் சமூகத்திற்குக் கிட்டியுள்ளது. விஞ்ஞானத்தின் வியத்தகு முன்னேற்றம் மக்கள் சமூகத்திற்கும் பல்வேறு துறைகளில் பயன் தருகின்ற போதிலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் சில உள்ளன. அணுசக்தியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி அதனை ஆக்கப்பணிகளுக்கே பயன்படுத்த விரும்பினார். ஆனால் அது இன்று அழிவு வேலைகளுக்கே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கர் யப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அணுகுண்டுகளைப் போட்டு பல்லாயிரம் மக்களைப் பலி கொண்டதை நாம் மறக்கமுடியாது. இன்றும் அணுசக்தி ஆயுதங்களைத் தயாரிப்பதில் வல்லரசுகள் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன. இவை எல்லாம் விஞ்ஞானத்தால் சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களாகும். இத்தகைய அழிவு வேலைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தாது ஆக்கவேலைகளுக்கு அதனைப் பயன்படுத்துமாறு மக்கள் சமூகம் இன்று குரல் கொடுத்து வருகின்றது. சுருங்கக் கூறின் விஞ்ஞானம் இன்று மக்கள் சமூகத்தின்மீது பிரிக்கமுடியாத வகையில் செல்வாக்குச் செலுத்துகிறது. அதன்மூலம் மக்கள் சமூகம் பெறும் நன்மைகள் பலவாயினும் தீமைகள் சிலவும் உண்டென்பது தெளிவாகிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி எதிர்காலத்தில் மக்கள் சமூகத்திற்கு வியத்தகு பயன்களை வழங்குமென எதிர்பார்க்கலாம். ஆசிரியர் : எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.

No comments:

Post a Comment