Friday, February 10, 2023
வீரமா முனிவரின் தமிழ்ப் பணிகள் - ஆசிரியர் : எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.
வீரமா முனிவரின் தமிழ்ப் பணிகள்
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
பெரும் புலவர் வேண்டும்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்" என்றார் பாரதியார். இக் கவிதைக்கு இலக்கணமாக, சமயம் வளர்க்க வந்த மேலை நாட்டினர் சிலர் விளங்கினர். தமிழின் சுவை கண்டனர்; பழமை தெரிந்தனர்; இனிமை நுகர்ந்தனர்; தீஞ் சுவைக்காப்பியம் படைத்தனர். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியே இனிமையெனத் துணிந்தனர். தமிழ் வளர்ச்சிக்காகத் தம்மையே அர்ப்பணித்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் இத்தாலிய நாட்டினரான வீரமாமுனிவர். அமிழ்தினும் இனிய தமிழ் மொழிகற்று, அதன் இனிமை தெளிந்து காப்பியமும், கலம்பகமும், இலக்கண நூல்களும் அகராதியும் தந்து தமிழ் கூறும் நல்லுலகின் பெரும் மதிப்பினைப் பெற்றவர். காலத்தால் மறக்க வொண்ணாப் பெரும் புலவர் அவர்.
தமது ஒப்பற்ற பணிகளால் தமிழர் தம் உள்ளங்களில் எல்லாம் உறைந்துள்ள வீரமாமுனிவரின் இயற்பெயர் கொன்ஸ்டான் சியஸ் ஜோசப் பெஸ்கி என்பதாகும். இவர் இத்தாலிய நாட்டில் வெனிஸ் மாநிலத்தில் காஸ்திகிளியோன் என்னும் ஊரில் கொண்டல்போ பெஸ்கி என்பாருக்கும் எழில் மிகுந்த எலிசபெத் அம்மையாருக்கும் 1680ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் எட்டாம் நாள் (08.11.1680) அருமை மகனாகத் தோன்றினார்.
இளமை முதலே இலக்கியக் கல்வியில் ஆர்வமிக்கவராக. விளங்கினார். தமது 18ஆம் வயதில் இலக்கியக் கல்வியை முடித்துப் பின்னர் ஓராண்டு தத்துவம் பயின்றார். பின்னர் உரோமாபுரியில் இத்தாலி, இலத்தீன், பிரெஞ்சு, கிரீக் முதலிய மொழிகளைக் கற்றார். 1706ஆம் ஆண்டு திருமுறைக் கல்வியைக் கற்கத் தொடங்கி நாலாண்டுகள் பயின்று குருவாகப் பட்டம் பெற்றார். துறவற நெறியைப் போற்றிமேற் கொண்ட இப்பெருந்தகை சமயப் பணியாற்றும் நோக்குடன் 1710ஆம் ஆண்டு தமது முப்பதாவது வயதில் லிஸ்பனிலிருந்து புறப்பட்டுத் தமிழ் நாட்டில் உள்ள அம்பலக் காட்டை வந்தடைந்தார். பின்னர் 8.5.1711முதல் மதுரையைத் தமது உறைவிடமாகக் கொண்டார். மதுரையில் தமிழ், தெலுங்கு, வடமொழிகளைக் கற்றுப் பன்மொழி வல்லுநரானார்.
இவருக்குத் தமிழ் கற்பித்தோரில் சுப்பிரதீபக் கவிராயர் என்பவர் குறிப்பிடத்தக்கவராவார். வீரமாமுனிவர் புலாலுணவை விலக்கி, ஒருவேளை மட்டும் உணவுண்டு, யோகியர் போலத் தம் வாழ்வை அமைத்துக் கொண்டார்.
தமிழின் மீது கொண்ட பெரும் பற்றினாலும் தமிழ்ப் புலமையாலும் உந்தப் பெற்ற வீரமாமுனிவர் மேனாட்டினின்றும் வரும் மிஷனரிகளுக்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராகவும் விளங்கினார். திருக்குறள், சிந்தாமணி, கம்பராமாயணம் முதலான நூல்களை நுணுகிக் கற்று, கவிபாடும் திறமை பெற்றார். சிந்தாமணியைப் போலச் சிந்தைக்கினிய காப்பியம் ஒன்றைக் கிறித்தவ நெறியில் படைத்திடப் பேரார்வம் கொண்டார். அதன் பேறாக உருவானதே "தேம்பாவணி'' எனினும் அருங்காவியம். 3615 விருத்தப்பாக்களைக் கொண்ட இக்காவியம் சொல்லழகும், பொருளாழமும், கற்பனை நயமும் சந்த இன்பமும், சொல்வளமும் கொண்டதாக, கற்றோர் போற்றும் பெருங்காவியமாகத் திகழ்கிறது.
தேம்பாவணி என்னும் காப்பியம் இயேசு நாதரின் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பு என்னும் சூசையப்பரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு படைக்கப் பெற்றது. கத்தோலிக்கத் திருச்சபைக் கொள்கைச் சார்பு கொண்டது. இந்நூல் திருமறையிலிருந்து 105 வரலாற்றுப் பகுதிகளைக் கதைவடிவாகவும் தத்துவ வகையாகவும் விளக்கும் சிறப்புடையது.
திருவள்ளுவர், திருத்தக்கதேவர், கம்பர், சேக்கிழார். மாணிக்கவாசகர் முதலான தமிழ் நாட்டுப் புலவர்களது கருத்துக்களும் மேலை நாட்டுக் கவிஞர்களான ஹோமர், வேர்ஜில், தாந்தே போன்றோரது கருத்துக்களும் இலைமறை காய்போல இக்காப்பியத்தில் விளங்குகின்றமையைக் காணலாம்.
வீரமாமுனிவரின் கவியாற்றலை நன்கு புலப்படுத்தும் பாடல்களுக்குச் சான்றாக கோலியாத்திற்கும் தாவீதுக்கு மிடையேயான உரையாடலைக் குறிப்பிடலாம். அரக்கத்தன்மையை ஒழிக்க இறையருள் துணைபுரிந்த நிலையை உணர்த்தும் பாடலொன்றில்
“கல்லை யேற்றலும் கவணினைச் சுழற்றலு மக்கள் ஒல்லை யோட்டலும் ஒருவரும் காண்கில ரிடிக்கும் செல்லை யொத்தன சிலைநுதற் பாய்தலும் அன்னாள் எல்லை பாய்ந்திருள் இரிந்தென வீழ்தலும் கண்டார்”
என்று கோலியாத்தின் வீழ்ச்சியை அழகொளிர விளக்குகின்றார். சிறந்த உவமைகள் மூலம் தமது புலமையைப் புலப்படுத்தியவர் வீரமா முனிவர். பைதிரம் நீங்குபடலத்தில் பல பாடல்களில் அவரது உவமைச் சிறப்பினை நாம் காணலாம்.
வானதூதன் இட்ட கட்டளையைக் கேட்ட சூசை உற்ற துயரினை.
அழற்குளித்த பைந்தாதோ கணிபாய் வேலோ அகல்வாயுட் புழற்குளித்த செந்தியோ உருமோ கூற்றோ பொருவின்றி நிழற் குளித்த உருவானோன் கொடுஞ் சொற்கேட்டு நெடுங்கடல் சுழற் குளித்த மனஞ்சோர்ந்துவளனப் பணியைத் தொழுதுனைந்தான்.
என்ற பாடல் மூலம் புலப்படுத்தினார். வானதூதன் உரைத்த மொழிகேட்டு நெருப்பில் மூழ்கிய பூந்தாது போலவும் கண்ணில் பாய்ந்த வேல் போலவும் புண்ணினுள் நுழைந்த செந்தி போலவும், நெடுங் கடல் நீரில் உண்டான கழியில் அகப்பட்டு முழ்கிய தன்மை போலவும். குசை வருத்தினான் என்றார்.
மாணிக்கவாசகர் அம்மானை பாடியது போல வீரமாமுனிவரும் தூய கித்தேரியம்மையின் வரலாற்றை 'அம்மானை' என்னும் சிறு நூலாகப் படைத்துள்ளார். "பேதையர்க்கும் ஓர் அம்மானை பேதை நான் பாடிடுவேன்" என்று சொல்வது வீரமாமுனிவரின் அடக்கத்தன்மைக்கு ஏற்ற சான்றாகும். கொள்ளிட நதியின் வட கரையில் உள்ள ஏலக்குறிச்சி என்ற ஊரில் கோவில் ஒன்று கட்டி அதில் மரியன்னையின் திருவுருவத்தை வைத்தார். அந்த அம்மையை அடைக்கலமாதா என அழைத்து அவ்வன்னையின் மீது "திருக்காவலூர்க்கலம்பகம்" என்னும் நூலையும் பாடினார்.
தமிழில் அகராதிகள் தோன்றுதற்கு வழிகாட்டிய பெருமையும் இவரையே சாரும். "அகர முதல எழுத்தெல்லாம்...." என்ற வள்ளுவர் உரைத்த மொழிக்கமையத் தமிழில் விளங்கும் சொற்கள் அனைத்தையும் அகரவரிசைப்படி வரிசைப்படுத்தி அவற்றைப் பொருள் விளங்கத் தொகுத்து அகராதியாக வெளியிட விரும்பினார். பண்டைய தமிழ் நிகண்டுகளில் உள்ள சொற்களை வரிசைப்படுத்தி பெயர், பொருள், தொகை, தொடை என்ற நான்கு வகைகளில் பிரித்து அமைத்து ""சதுரகராதி" என்னும் பெயரால் 1732இல் வெளியிட்டார்.
பிற்காலத்தெழுந்த பேரகராதிகட்கெல்லாம் இதுவே அடிப்படையாக அமைந்தது. இதனாலே தான் இவர் 'தமிழகராதியின் தந்தை' எனப் போற்றப்படுகிறார். இவரைப் பின்பற்றிப் பல மேனாட்டுத் தொண்டர்கள் தமிழ் அகராதிகளை வெளியிட்டனர்.
அகராதி வெளியீட்டோடுமட்டும் நின்று விடாது பல மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டார். உலகப் பொது மறையான திருக்குறளை ஆழ்ந்து கற்றார். தாம் கற்று மகிழ்ந்த திருக்குறளின் அருமையினைத் தன் நாட்டவரும் கற்று இன்புற வேண்டுமெனக் கருதினார். திருக்குறளின் அறத்துப் பாலினையும் பொருட்பாலினையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்து 1730இல் வெளியிட்டார்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தினை மேற்கொண்ட வீரமாமுனிவர் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கும் பெருந் தொண்டாற்றினார். இவர் எழுதிய வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குருகதை என்பன அவரது உரை நடைச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாக உள்ளன.
வீரமாமுனிவர் இலக்கிய நூல்களை மட்டுமன்றி இலக்கண நூல்களையும் எழுதியுள்ளார். தொன்னூல் விளக்கம் என்னும் பெயரால் இவர் இயற்றிய இலக்கண நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அருந்தமிழ் இலக்கணம் ஐந்தையும் விரித்து விளக்கினன் வீரமா முனியே" என்று தொன்னூலின் சிறப்புப்பாயிரம் செப்புகின்றது. பேச்சுத் தமிழ் இலக்கணத்தைக் 'கொடுந்தமிழ் இலக்கணம், என்றும் ஏட்டுத் தமிழ், இலக்கணத்தைச் 'செந்தமிழ் இலக்கணம்' என்றும் தனித்தனியே இலக்கணம் எழுதியுள்ளார். இதன் மூலம் வீரமாமுனிவரின் இலக்கணப் புலமை நன்கு புலப்படுகிறது. மேனாட்டவராயினும் தமிழ் மொழியினைத் தமிழ் இலக்கண மரபுக்கமையக் கற்றுத், தாம் கற்றவற்றைப் பிறகும் கற்று இன்புறும் வகையில் வெளியிட்ட பெருந்தகை வீரமாமுனிவர் என்றால் அது மிகையல்ல.
இவர் எழுதிய 'பரமார்த்த குரு கதை' சிறுகதை ஆக்கத்திற்கு வழிகாட்டியதெனலாம். பின்னாளில் தமிழில் சிறுகதைகள் தோன்றுதற்கு வழிகாட்டியாக முன்னோடியாக இவர் திகழ்ந்துள்ளார். இவரது பரமார்த்த குருகதை இன்றும் பலராலும் விரும்பிப் படிக்கப்படுவதை நாம் கண்ணாரக் காணலாம்.
வாழ் நாள் முழுதும் சமயப் பணியுடன் தமிழ்ப் பணியைத் தன் தலையாய பணியாகக் கொண்டு தொண்டாற்றிய வீரமாமுனிவர் 1747ஆம் ஆண்டு மாசித்திங்கள் நான்காம் நாள் (04.02.1747) தமது அறுபத்தாறாம் வயதில் அம்பலக் காட்டில் உள்ள கிறித்தவ மடத்தில் இறையடி எய்தினார். காலத்தால் மறக்கவொண்ணாத் தமிழ்ப்பெரும் புலவராக வீரமாமுனிவர் விளங்குகின்றார். அவர் குறித்துச் சொல்லின் செல்வர், டாக்டர். ரா.பி.சேதுப்பிள்ளை கூறிய பின்வரும் வார்த்தைகள் அவர்தம் அழியாப் புகழுக்குச் சான்றாகும்.
** வீரமாமுனிவர் ஆக்கிய நூல்களால் தமிழ்த் தாய் அழகு பெற்றாள். தேம்பாவணி, தமிழ் அன்னையின் கழுத்தில் வாடாத மலர் மாலையாகத் திகழ்கின்றது. காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சி அளிக்கின்றது. தொன்னூல் பொன்னூலாக விளங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது."பைந்தமிழ் வளர்த்த பாவலரான வீரமாமுனிவரின் திருநாமம் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
- ஆசிரியர் : எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment